பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து “டோக் பிசின் “ மொழியில் திருக்குறளை வெளியிட்டனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் ஜி7 உறுப்பு நாடுகளை தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொண்டன. ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உணவு, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட 10 அம்ச திட்டங்களை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.
அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே வரவேற்றார். அப்போது, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மோடியின் காலை தொட்டு வணங்கினார். பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, இசை நிகழ்ச்சி, நடனம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைனைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பப்புவா நியூ கினியாவில் இன்று நடைபெறும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதன் பின்னர் பப்புவா நியூ கினியா பிரதமரும், இந்திய பிரதமர் மோடியும் இணைந்து டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்டனர். இதுகுறித்து பிரதமர் மோடி திருக்குறள் என்பது பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில்
பப்புவா நியூ கினியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிடுவதை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர்” என தெரிவித்துள்ளார்.







