இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்ட முன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சட்டப் பேரவையில் ஒருமனதாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாம் முறை சட்ட மன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.
ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு பல தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இது குறித்து திமுக எம்.பி வில்சன் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது வரவேற்க்கத்தக்கது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தான் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதை அவர் முன்கூட்டியே செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இன்னும் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கும் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்” என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது..
” ஆளுநர் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டிருக்கிறார்; இது வரவேற்கக் கூடிய ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது : இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும். ஆளுனரின் முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்பதையே ஆளுனர் மீண்டும், மீண்டும் வினாவாக எழுப்பி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுனர் செய்த தாமதம் ஏற்க முடியாதது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால் அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும். மீண்டும் ஒரு சட்டம் இயற்றும் தேவையும் இருந்திருக்காது!” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.







