ஆன்லைன் சூதாட்டம்: மதுரையில் உயிரை மாய்துகொண்ட இளைஞர்..!

மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு…

மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு தமணன்சாலை பகுதியை சேர்ந்தவர்கள் மகாலட்சுமி – முத்துராமன் தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ஆண்டுளுக்கு முன்பு தாய் மகாலட்சுமி உயிரிழந்த நிலையில் தந்தை முத்துராமன் வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால் மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 26 வயதுடைய குணசீலன் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர், நாளடைவில் அதற்கு முழுமையாக அடிமையாக தொடங்கியுள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லாமல் பணத்தையும் ஆன்லைன் ரம்மி மூலமாக இழந்துள்ளார்.

இதனையடுத்து குணசீலனின் தம்பி பசுபதி அண்ணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனை அடைக்க கொடுத்ததோடு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்து வந்து பணியில் சேர்த்துள்ளார். அங்கு கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்த குணசீலன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் மேலும் அதிக அளவிலான பணத்தை இழந்த குணசீலன் பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அதிகளவிற்கான பணத்தை இழந்து விட்டதாக தனது சக பணியாளர்களிடம் தெரிவித்து புலம்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிக மன உளைச்சல் காரணமாக சாத்தமங்கலம் 1-வது தெருவில் அவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்த குணசீலன், கடைசி செமஸ்ட்டர் எழுதமலேயே இப்படியொரு நிலையை தேடிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குண சீலனின் தம்பி பசுபதி எதேச்சயாக அண்ணன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த போது அவர் சடலமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் குணசீலனின் உடலை மீட்டு் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி மூலமாக பணத்தை இழந்து ஏற்கனவே பல்வேறு நபர்கள் தற்கொலை செய்துள்ள நிலையில் மதுரையில் ஓட்டலில் பணிபுரிந்த மேலும் ஒரு இளைஞர் தனது கல்லூரி படிப்பையும் இழந்து, ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தையும் இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.