ஒருதலைக் காதல் – திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி குத்திக்கொலை!

ஒருதலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது குடும்பத்தாரும், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் குடும்பத்தாரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வடுகபாளையம் செல்லமுத்து நகரில் குடியிருந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பு பிரவீன் குடும்பத்தார் பொள்ளாச்சி உடுமலை ரோடு அருகில் குடிபெயர்ந்து உள்ளனர்.

இதற்கிடையே பிரவீன் கல்லூரி மாணவி அஸ்விதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அஸ்விதாவிடம் பிரவீன் கூறியதாக தெரிகிறது. அதற்கு அஸ்விதா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், மாணவி தனியாக வீட்டில் இருக்கும்போது கத்தியால் குத்தி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலை குறித்து ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் பிரவீன் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.