‘மனுசி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு – இயக்குநர் வெற்றிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனு!

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து பட தயாரிப்பாளரும், இயக்குனருமான வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரையிலர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது.

இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தணிக்கை சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.