“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்”

எம்ஜிஆர் நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாட்டால், நின்றுபோன ஸ்ரீதரின் திரைப்படம் சிவந்த மண் ஆக வெற்றி நடைபோட்டது. நடிகர் திலகம் சிவாஜி, இளமை இயக்குநர் என கருதப்பட்ட ஸ்ரீதர் ஒன்றாக…

எம்ஜிஆர் நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாட்டால், நின்றுபோன ஸ்ரீதரின் திரைப்படம் சிவந்த மண் ஆக வெற்றி நடைபோட்டது.

நடிகர் திலகம் சிவாஜி, இளமை இயக்குநர் என கருதப்பட்ட ஸ்ரீதர் ஒன்றாக இணைந்து தந்த ஆக்சன் திரைப்படம் சிவந்த மண். 1969ம் ஆண்டு வெளியான திரைப்படமான சிவந்த மண், சமூகப் படங்களில் பிரமாண்டம் என்ற புதிய அடையாளத்தை காட்டியது. பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட நிலையில், எஞ்சிய காட்சிகளைப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்து சென்னையில் படமாக்கினார்கள். எகிப்தின் பிரமிடை மிகப் பெரிய அளவில் வடிவமைத்து, சுழலும் மேடையுடன் ‘பட்டத்து ராணி’ பாடலுக்கான அரங்கம் அமைக்கப்பட்டது. வாஹினி ஸ்டுடியோவில் ஆறு போன்ற அரங்கம் அமைக்க பிரமாண்டத் தொட்டிகள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீர் நிரம்பிய தொட்டி உடைப்பெடுத்து ஸ்டுடியோவில் பரவி, வடபழனி சாலை முழுவதும் தண்ணீர் ஓடியது.

பதினைந்து சவுக்கடிகளுக்குப் பிறகு துப்பாக்கியால் சுடப்படுவது வில்லனா, அல்லது கதாநாயகனா என பரபரப்பை ஏற்படுத்திய சிவந்த மண் திரைப்பட காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது. வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில், பாரிஸ் நகரின் ஈபிள் டவர், இத்தாலியின் ரோம், ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலை என காணாத இடங்கள் காட்சிகளாக விரிந்தபோது அந்த நாடுகளுக்குப் போய்வந்த உணர்வைக் கொடுத்தன.

1969ம் ஆண்டு வெளியான சிவந்தமண் 32 திரையரங்குகளிலும் 50 நாட்கள் ஓடியது. 9 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி, சென்னையில் அதிகபட்சமாக 21 வாரங்கள் திரையிடப்பட்டு நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்தது. ‘சிவந்த மண்’ கதையை ‘தர்த்தி’ என்ற பெயரில், ராஜேந்திரகுமார் – வஹிதா ரஹ்மான் நடிக்க இந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கினார் இயக்குநர் ஸ்ரீதர். நாயகன் ராஜேந்திர குமாரின் நண்பன் ஆனந்த் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார்.

பல சிறப்புகள் பெற்ற சிவந்தமண் திரைப்படம், முதலில் ‘அன்று சிந்திய ரத்தம்” என்ற பெயரில் படப்பிடிப்பு நடைபெற்றது. எம்ஜிஆர் நடிக்க சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், எம்ஜிஆர் விலகிட சிவந்த மண் திரைப்படமாக உருவானது. தேனிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சிருக்கும்வரை. கல்யாண பரிசு என சமூகப்படங்கள் தந்த ஸ்ரீதர், சிவாஜி நடிக்க ஆக்சன் படம் தயாரித்து வெற்றியும் கண்டார்… நெஞ்சிருக்கும் வரை நிலைத்தும் நிற்கிறார்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.