கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமானதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை தேடும் பணி
தீவிரமடைந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குளத்தூரை சார்ந்தவர் திவாகர். இவரது குலதெய்வக் கோவில் கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சியில் உள்ள பவுளியம்மன் கோவில். நேற்று விடுமுறை தினம் என்பதால் குலதெய்வக் கோவிலில் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்த திட்டமிட்டு வந்துள்ளனர். திவாகர் தனது கல்லூரி நண்பர்களான கோவையை சார்ந்த ஐடி ஊழியர் விஷ்ணு மற்றும் ஆதர்ஷ் ஆகியோருடன், சங்கர், நவீன்குமார், அஜீத் உள்ளிட்ட 5 பேர் கிடா விருந்துக்கு வந்துள்ளனர்.
நேற்று மதிய விருந்துக்கு முன்பாக 1 மணியளவில் அதே பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த போது ஆகாஷ் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்க துவங்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்ணு காப்பாற்ற முற்பட்ட போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து உடனடியாக புகழூர் தீயணைப்பு துறைக்கும், வாங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் தீயணைப்பு துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. ஆற்றில்சுமார் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளதாலும், அப்பகுதியில் தண்ணீரின் இழுவை அதிகமாக இருப்பதாலும் தேடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாலை 6 மணியாகிவிட்டதால் இருட்ட துவங்கியது. இதனால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலையில் தீயணைப்பு துறையினர் தேடலில் ஈடுபட்ட போது இளைஞர்கள் குளித்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே விஷ்ணுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆகாஷ் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.







