புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி அந்த யூனியன் பிரதேசத்துக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கீழூரில் உள்ள நினைவுத் தூணில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு புதுவை இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது.
இந்த நாள் புதுச்சேரி சட்டபூர்வ பரிமாற்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது, வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூர் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூணில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சட்டப்பூர்வப் பரிமாற்ற நாளை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2வது ஆண்டாக இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்காததால் சுதந்திர போராட்ட தியாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் தியாகச் சுவரில் புதுச்சேரி சுதந்திரத்திற்காக போராடி வாக்கெடுப்பில் பங்கேற்ற தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.








