கடலூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட
வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 45 போலி
பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் அருகே உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர் தனது
முகநூலை பயன்படுத்தியபோது, அதில் வந்த விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை
வாங்கி தரப்படும் எனவும், வேலை தேடுபவர்கள் தனது செல்போனில் தொடர்பு
கொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்த வாசு, முகநூலில்
குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பேசிய நபர், தனது பெயர் செந்தமிழ்பாண்டியன் என்றும், மதுரையை சேர்ந்த நான் பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், தனக்கு ரூ.1 லட்சம்
கொடுத்தால் பாஸ்போர்ட்டுடன் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய
வாசு, தான் ரூ.1 லட்சம் தருவதாகவும், தனக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி
தரும்படியும் கூறியுள்ளார். பின்னர் பாண்டியன், தனது நண்பர் பாரதிராஜாவின்
வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு வாசுவிடம் தெரிவித்தவுடன் கடந்த ஆண்டு
பாரதிராஜாவின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பாண்டியன், பாரதிராஜா ஆகியோர் வாசுவுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் வாசு, பாண்டியன் தெரிவித்த முகவரியை வைத்துக் கொண்டு மதுரைக்கு சென்று தேடி பார்த்தபோதை அவர் அங்கு இல்லை. அப்போது தான், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வாசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளித்தார்.
அதன்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு
மேற்பார்வையில் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுரை மேலூர் கே.கே.நகரை சேர்ந்தவர் செந்தமிழ்பாண்டியன்,
பாரதிராஜா ஆகியோர் வாசுவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்த பாண்டியனை மடக்கி பிடித்து கைது
செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 45 போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார்
தலைமறைவாக இருக்கும் பாரதிராஜாவை தேடி வருவதுடன், அவர்கள் ஆன்லைன் மூலம் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.








