ஈரோட்டில் போக்குவரத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பூங்கோதை. இவர் பெருந்துறை நான்கு ரோடு பகுதியில் நேற்று போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு சுமார் 9 மணி அளவில் அந்தப் பகுதியில் கூட்டம் அதிகமானதால் போலீஸ் கூண்டிலிருந்து கீழே இறங்கி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்தப் பகுதியாக வந்த, தனியார் நிறுவன அதிகாரி ராஜேந்திரன் என்பவர், நடுரோட்டில் காவலர் பூங்கோதையிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவரை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பூங்கோதை பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ராஜேந்தரை கைது செய்தார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.







