‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’- ஜி20 தலைமை குறித்து பிரதமர் மோடி

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடுவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்கலம் என்பதை நோக்கமாக கொள்வோம்…

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடுவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்கலம் என்பதை நோக்கமாக கொள்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச. 1) அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இதுகுறித்து கூறியுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பை மேலும் சிறப்பாக்க எப்படி செயல்படுவது? ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். இதனை நம்மால் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும்.

இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன. இன்று நாம் வாழ்வதற்கு போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை. நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை. உண்மையில் அது தேவையே இல்லாத ஒன்று.

இன்று, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. அதேசமயம், ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காண முடியும். புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என பிரதமர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.