வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று பிற்பகலில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க முடியும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயமில்லை. இருந்தபோதிலும், ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் விவரங்கள் இணைக்கும் பணி நடந்தது. கடந்த வாரம் வரை இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களோடு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார்







