ஓணம் பண்டிகை-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட…

ஓணம் பண்டிகையையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை.

தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று இறைவனே நேரில் வந்து பார்ப்பதாகவும், அப்போது அனைவரும் வீடி தேடி வரும் இறைவனை மலர்க் கோலமிட்டும், அலங்காரம் செய்தும், அறுசுவை உணவு படைத்தும், வரவேற்பதே ஓணம் பண்டிகையின் கருத்தாக்கம்.

அக்காலத்தில் மன்னர்களை இறைவனுக்கு நிகராக வணங்குதல் மரபாக இருந்தது. ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நாம் நலமாக இல்லை என்றால் கூட மாமன்னரின் வருகை மக்களுக்கு நன்மைகளை வழங்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வருவதால் ஓணம் சிறப்புக்குரியது.

அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகிறார்கள்.

ஓணம் திருவிழா, நம் கேரள சகோதர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், கொண்டாடும் திருவிழாவாகவும் திகழ்கின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.