விஜயதசமி அன்று ஆந்திர மாநில நிர்வாகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

விஜயதசமி அன்று, ஆந்திர மாநில நிர்வாகம், அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியும்…

விஜயதசமி அன்று, ஆந்திர மாநில நிர்வாகம், அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியும் தெலங்கானாவின் தலைநகராக ஹைதராபாத்தும் முடிவு செய்யப்பட்டது. ஆந்திரத்தின் தலைநகராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.

விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும் கர்னூல் நீதிமன்றத் தலைநகரமாகவும் செயல்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

மாநில நிர்வாகத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில மாதங்களாகவே கூறிவந்த நிலையில், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் நிர்வாகச் செயல்பாடுகள் துவங்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளின் கட்டடங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளின்படி, இடமாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் குடியிருப்புகள், முகாம் அலுவலகங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற டிசம்பரில் முழுமையாக இந்த இடமாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.