சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 415ஆக அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 34ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும். மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது..
மேலும், கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். ஒரே தட்டை பலர் உபயோகிக்கும்போது தொற்று எளிதில் பரவுவதற்கான அபாயம் உள்ளது.
வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடர்ந்து பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டுமல்லாது கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








