கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.50,000 நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 50,000 வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டுமென அவர் வலிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
”இந்தியா முழுவதும் கொரோனா பொருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ 50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பங்கையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2020 ஏப்ரல் முதல் நேற்று வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக தற்போதைய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றினால்தான் இறந்ததாகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்தி தெரிவிக்கின்றன.
தற்போதைய முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். உச்சநீதிமன்றமே 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட பின்பும், ஆட்சி வந்த தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







