ஒமிக்ரான் பரவல்; கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில், ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.   தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா…

நாட்டில், ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று, இந்தியாவில் 13 மாநிலங்களில் பரவியுள்ளது. நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 200 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட அளவில் கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக 10 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பரவல் கண்டறியப்படும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதுடன், அனைவருக்கும் தடுப்பூசி என்பதை நிலை நிறுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய ஒமிக்ரான் கொரோனா வகை 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாடு விதிக்க மாநில, மாவட்ட நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.