கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலம், தங்களது பணியை மக்கள் ஏற்றுக் கொண்டது நிரூபணமாகி உள்ளது என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகராட்சியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதம் முடிந்தபோதும் கொரோனாவின் தாக்கத்தால் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 144 வார்டுகளில் உள்ள 4 ஆயிரத்து 949 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 144 இடங்களில் 134 வார்டுகளில் திரிணாமுல் கட்சி வெற்றி பெற்றது. 3 வார்டுகளில் பாஜகவும், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதனிடையே, கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் கட்சி பெற்றுள்ள வெற்றி ஒரு மைல்கல் வெற்றி என தெரிவித்தார். மேலும் தங்களின் பணியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








