”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ – சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு!

”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.  ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை…

”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். 

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் செலுத்தியபோது கை நிறம் மாறி கருப்பாக காணப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் ரத்த ஓட்டம் இல்லாமல் கை அழுகியது தெரிய வந்தது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக் குறைபாடு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள்,  சுகாதார நிலையங்களில் பணிக்கு வரும்  மருத்துவர்கள்  சரியான நேரத்தில் பணிக்கு வருவதை அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும். அதேபோல புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவர்களுக்கான பணி நேரம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான நெறிமுறைகள்:

-புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

– பிற மருத்துவர்கள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

– மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். அதேபோல அவசரகால அடிப்படையில் 24 மணிநேரமும் தொடர்பில் இருக்க வேண்டும்.

மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகள் :

– புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணி வரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

– 24 மணிநேர பணியில் இருக்கும் மருத்துவர்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை புறநோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

– பல் மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் காலை 8 மணிமுதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரையும் பணியில் இருக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

– 1 முதல் 3 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 9 மணிமுதல் 4 மணிவரை மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

– 5 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஷிப்ட் அடிப்படையில் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிறதா என்பதை துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்க
வேண்டும்.” என்று ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.