SAFF இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் போது, இந்திய கால்பந்து வீரர் ஜீக்சன் சிங்கின் தோளில் தேசியக் கொடிக்குப் பதிலாக மணிப்பூரின் மைதேயி சமூகக் கொடி போர்த்தப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக மாறிப் போனது. இதுவரை சுமார் 130 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 50 நாட்களாக அங்கு உட்சபட்ச பதற்றம் நிலவி வருவதோடு, இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நேற்று இரவு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து போட்டியில் குவைத் அணியை பெனால்டி ஷூட் முறையில் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றிய போதிலும், போட்டியின் வெற்றியைக் கொண்டாடும் போது, இந்திய கால்பந்து வீரர் ஜீக்சன் சிங்கின் தோளில் தேசியக் கொடிக்குப் பதிலாக மணிப்பூரின் மைதேயி சமூகக் கொடி போர்த்தப்பட்டிருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜீக்சன் சிங் இந்தியாவின் U-17 அணியின் கேப்டனாக இருந்தவர். மேலும் U-17 உலகக் கோப்பையில் விளையாடி, அந்த உலகக் கோப்பையில் கோல் அடித்த ஒரே இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதோடு, நேற்று முடிவடைந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் (SAFF) இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய வீரர்களில் முக்கியமான ஒருவரான இவர், தற்போது செய்த இந்த செயல் விவாதத்திற்குரிய சம்பவமாக மாறியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஜீக்சன் “அன்புள்ள ரசிகர்களே… யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் கொடியுடன் வரவில்லை. எனது மாநிலமான மணிப்பூரில் நடக்கும் பிரச்னைகளை மட்டுமே கவனத்தில் கொள்ள முயன்றேன். SAFF கோப்பை வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்” என்று கூறியுள்ளார். இருப்பினும் SAFF கால்பந்து போட்டி மேடையில் அவர் அதை பயன்படுத்திய விதம் குறித்து பலர் அதிருப்தி அடைந்துள்ளதோடு, வேறு சிலரோ இது மீண்டும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.








