சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை… பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல்…

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயம் கலக்கப்படுவது அறியப்பட்டதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை,  தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில்…

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயம் கலக்கப்படுவது அறியப்பட்டதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கடற்கரை சாலை,  தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். குழந்தைகளை கவரும் வகையில் பிங்க் நிறத்தில் பாலித்தின் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இந்த பஞ்சுமிட்டாயில் விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனால் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.  அதில் ரோடமின்-பி (RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் விஷ நிறமியாகும்.

இதையடுத்து,  அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து அனைத்து பஞ்சு மிட்டாய்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை தென்வந்திரி நகர் போலீசாரிடம் ஒப்படைத்ததுடன்,  அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிறமியை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறையினர் பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  பிங்க் நிற பஞ்சுமிட்டாயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலக்கப்படும் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.  சோதனையின் போது மெரினா கடற்கரையில் 6-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் வியாபாரிகளை பிடித்தனர்.  அதனுடன் 1150 ரசாயனம்  கலந்த பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்த பாக்கெட்டுகளை ஆய்வு செய்த பிறகு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.