ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்துள்ளது.
ஒடிசா சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
“ ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை; ரயிலில் பயணித்தவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், உறவினர்கள் ஒடிசாவிற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குமார் ஜெயந்த் தெரிவித்தார்.