ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேரிட்ட பகுதி, வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் சற்றுதொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயர் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.








