ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் இன்னும் அடையாளம் காணப்படாமல் 29 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக செயல்பட்டு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக செயல்படுகிறது. இந்த ரயில் கடந்த ஜூன் 2-ம் தேதி வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 287 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 6 போ், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனா். உயிரிழந்தோரில் பலரது சடலங்கள், சிதைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன. இதனால் 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் இருந்தன. அவை அனைத்தும் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
ஒரு சடலத்துக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், மரபணு சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன. அதன்படி, முதல்கட்டமாக 103 பேருக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட மரபணு மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு உரிமை கோராமல் மீதமிருக்கும் சடலங்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தோரில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவை, புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







