அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதனால் இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஜூலை 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் கைது நடைமுறையை எதிர்த்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






