ஒடிஷாவில் ஆட்சியில் உள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான அரசடன் மத்திய அரசு இணக்கமாக செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக அல்லாத மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணக்கமாக செயல்படுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படும் சூழலில் அவர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமித் ஷா, அம்மாநில நாளிதழ் ஒன்றின் விழாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் சேர்ந்து பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ஒடிஷா மக்களின் முழுமையான நலனுக்காக நவீன் பட்நாயக் அரசுடன் மத்திய அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
மத்தியில் முக்கிய பொறுப்புகளில் ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த பிரதிநிதித்துவத்தை ஒடிஷா பெற்றுள்ளதாகக் கூறினார்.
ஒடிஷாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், மத்திய பழங்குடியினத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஷ்வர் டூடு என பலர் உயர் பொறுப்புகளில் இருப்பதாக் குறிப்பிட்டார்.
அந்த வகையில் மத்திய அரசு கூறி வரும் நல்ல நாட்களை ஒடிஷா மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.










