ஜூலை 18ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்ட தொடர் திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாக இன்றோடு முடித்துக் கொள்ளப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான மழைக்கால கூட்ட தொடர் ஜூலை 18ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், நாளைய தினம் அரசு விடுமுறை என்ற காரணத்தினால் நாடாளுமன்றம் அலுவல் நேரம் கிடையாது; இதேபோல் வியாழக்கிழமை “ரக்க்ஷா பந்தன்” காரணமாக விடுமுறை என்ற காரணத்தினால் இந்த வாரத்திற்கான மழைக்கால கூட்டத்தொடர் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை என 3 நாட்கள் மட்டுமே நடைபெற இருந்தது.
இந்நிலையில் வட மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் கூட்டத்தொடரை இன்றைய தினமே முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இருவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை இன்றோடு முடித்துக் கொள்வதாக அவையில் கூறினார்.
இதனையடுத்து “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்-2022” திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு பெற்றது.
நடைபெற்று முடிந்த மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலான நாட்கள் எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது தொடர்பாகவும் கடும் அமளி நீடித்ததால் நாடாளுமன்றத்தின் அலுவல் பல நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மின்சார திருத்த சட்ட மசோதா-2022 உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.





