இந்தியாவில் 16 பெண்களில் ஒருவருக்கும், 25 ஆண்களில் ஒருவருக்கும் உடல் பருமன் பிரச்சனை இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . அதுவும் இத்தகைய உடல் பருமன் மாற்றங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் நிலவி வருவதாகவும், அது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வின் (NFHS) ஐந்தாவது மற்றும் சமீபத்திய சுற்றில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFHS வெளியிட்டுள்ள விரிவான பகுப்பாய்வு முடிவில், ஆண்களை விட பெண்களிடையே உடல் பருமன் பிரச்சனை அதிகமாக இருப்பதாகவும், மேலும் ஒப்பீட்டளவில் வளமான, வசதியான பெண்களிடையே இந்த சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தற்போது ”middle-aged spread” என்று சொல்லப்படக்கூடிய நடுத்தர வயது பெண்களிடத்திலேயே இது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட NFHS இன் ஐந்தாவது சுற்றின் அறிக்கையின் படி, 15-49 வயதுடைய பெண்களில் 6.4 சதவீதமும், ஆண்களில் 4.0 சதவீதமும் உடல் பருமனாக இருக்கிறார்களாம். மேலும் அதே வயதில் உள்ள 17.6 சதவீத பெண்களும் 18.9 சதவீத ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக, அதாவது பருமனாக இல்லாமல்
உடல் அதிக எடை கொண்ட நபர்களாக இருக்கிறார்களாம். இந்த புள்ளி விவரங்களின் மூலம் இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் அதிக எடையுடன் உள்ளனர் என்பதும் , மேலும் ஐந்தில் ஒரு பகுதியினர் சாதாரண உடல் எடையை விட அதிகமாக இருப்பதும் நமக்கு புலப்படுகிறது.
உடல் பருமனும் பாலின இடைவெளியும்:
இத்தகைய கணக்கீடுகளில் உடல் பருமனாக இருக்கிறார்கள் என்பது எப்படி அளவிடப்படுகின்றது என்றால், ஒரு நபரின் உடல் நிறை குறியீட்டெண் ((BMI) அடிப்படையில் தான். அதாவது ஒரு நபர் 30க்கு மேல் BMI என்று சொல்லப்படக்கூடிய உடல் நிறை குறியீட்டெண் பெற்றிருந்தால், அவர் உடல் பருமனான நபராக கருதப்படுவார். இந்த விஷயத்தில் பிராந்திய வேறுபாடுகளும் BMI அளவீட்டினை ஆண், பெண் இரு பாலரிடையே வேறுபடுத்தி காட்டுகிறதாம் . இதன் அடிப்படையில் தான் சில இடங்களில், ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
உதாரணமாக டெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு 14.2 சதவீத பெண்கள் உடல் பருமனாக இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது, ஆனால் இதுவே ஆண்களோ அங்கு 7 சதவீதம் தான் பருமனாக இருக்கிறார்களாம் . இதே போல் கோவாவில், சுமார் 9.5 சதவீத பெண்கள் உடல் பருமனாக இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் ஆண்களில் 2.8 சதவீதம் பேர் மட்டுமே பருமனாக உள்ளனராம்.
மேலும் இந்தியாவிலேயே அதிக உடல் பருமன் உள்ள மாநிலமான பஞ்சாபில், சுமார் 14.2 சதவீத பெண்களும், 8.3 சதவீத ஆண்களும் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர ஆந்திரப் பிரதேசத்தில், 12 சதவீத பெண்களும், 6 சதவீத ஆண்களும் இந்த உடல் பருமன் பிரச்சனையுடன் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை
பொறுத்தவரை 14.1 சதவீத பெண்களும், 8.7 சதவீத ஆண்களும் உடல் பருமனாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை இந்த வேறுபாடுகள் மிக குறைவு , அங்கு சில இடங்களில் பெண்களை விட அதிகமான ஆண்கள் உடல் பருமனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக மிசோரமில் 5.6 சதவீத ஆண்களும், 4.6 சதவீத பெண்களும் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் நாகாலாந்தில் 2.6 சதவீத ஆண்களும், 1.8 சதவீத பெண்களும், மேகாலயாவில் 1.6 சதவீத ஆண்களும், 1.4
பெண்களும் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஹேமலதா ஆர், பேசுகையில் “ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள்
காட்டுகின்றன.
மேலும், அதே உடல் செயல்பாடுகளில் அவர்கள் செலவிடும் ஆற்றலின் அளவு ஆண்களை விட குறைவாக இருக்கின்றது .குறிப்பாக உடல் அமைப்பில் உள்ள வேறுபாடுகள், ஹார்மோன்களும் இத்தகைய விகித வேறுபாடுகளை காட்டலாம் ,” என்று அவர் கூறினார்.
அதிக பணம், அதிக எடை:
இந்த உடல் பருமன் பிரச்சனையில் கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இல்லாமல், செல்வமும், வசதியும் கூட முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதாவது NFHS தரவு கணக்கெடுப்பின்படி 2019-21 ஆம் ஆண்டில், 12.6 சதவீத பெண்கள் இந்தியாவில் சராசரியாக நல்ல வசதியுடைய, செல்வசெழிப்பான பின்புலத்தில் உள்ள நபர்கள் உடல் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களில், நல்ல வசதியுடைய செல்வந்தரின் உடல் பருமன் விகிதம் 8 சதவீதமாகவும், ஓரளவு வசதியுடைய நபர்களில் 1.2 சதவீதம் உடல் பருமனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2005-06 தரவு கணக்கீட்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டுகளின் போக்கு சற்று வித்தியாசமாகவே உள்ளதாம், காரணம் வசதியுடைய நபர்களே பருமனாக மாறிவந்த நிலையில் தற்போது middle or higher wealth என்று சொல்லப்படக்கூடிய நடுத்தர மற்றும் ஓரளவுக்கு செல்வச்செழிப்புடைய நபர்களும் உடல் எடை அதிகரித்து வருவது
தானாம். உதாரணமாக, 2005-06ல், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொரு 100 பெண்களுக்கும், ஒரு பெண் கூட பருமனாக இல்லயாம், விகித அளவு மிக குறைவாகவே இருந்ததாம் (0.9 சதவீதம்). ஆனால் 2019-21-ல் வேகமாக முன்னேறி, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த 100 பெண்களில் 17 பெண்கள் பருமனாக மாறியுள்ளனர் (5.7 சதவீதம்). அதே
போல் வசதிவாய்ப்புள்ள பெண்களிடையே உடல் பருமன் விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாம்.
ஆனால் ஒப்பீட்டளவில் ஆண்களின் உடல் பருமன் விகிதம் பெண்களை விட குறைவாகவே இருந்தாலும், வளர்ச்சி போக்கு அதிகரித்தவாரே இருக்கிறதாம் . அதாவது 2005-06 ஆம் ஆண்டில் நடுத்தர செல்வ வகுப்பை சேர்ந்த ஆண்களில் 0.4 விழுக்காட்டினர் மட்டுமே பருமனாக இருந்தார்களாம் , ஆனால் தற்போது 2019-21 ஆம் ஆண்டில் 3
விழுக்காடாக உயர்ந்ததுள்ளது. அதேபோல் நல்ல வசதியுடைய ஆண்களை பொறுத்தவரை , 2005-06ல் 4 சதவீத ஆண்கள் மட்டுமே பருமனாக இருந்ததாகவும் , தற்போது இது 2019-21ல் 8 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. இது குறித்தும் விளக்கிய டாக்டர் ஹேமலதா ஆர் “பணக்காரர்கள் அதிகம் வாங்கும் சக்தியைக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஆரோக்கியமான உணவு விருப்பங்களுக்குச் அத்தகைய பணத்தை செலவிடுவார்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியாது. அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகள் மற்றும் மிகவும் மோசமான ஊட்டச்சத்தை கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றையே அதிகமாக விரும்பி அவர்கள் சாப்பிடலாம். மேலும் வாழ்க்கை முறையின் மாற்றத்தால் குறைந்த உடல் செயல்பாடுகளையே அவர்கள் தொடர்ந்து செய்வதால் இந்த உடல் பருமன் அதிகரிப்பு நிகழலாம் , ”என்று அவர் கூறினார்.
உடல் எடையும், வயதும்:
இத்தகைய உடல் பருமன் அதிகரிப்பில் வயதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. காரணம் NFHS கணக்கெடுப்பின்படி, 2019-21 ஆம் ஆண்டில், 40-49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 11 சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது , மேலும் ஆண்களுக்கு இது 5.7 சதவீதமாக இருக்கிறது, இவை இரண்டும் சராசரி தேசிய உடல் பருமன் விகிதங்களை விட அதிகமாக உள்ளனவாம். இதைப் பற்றி டாக்டர் ஹேமலதா ஆர் மேலும் விளக்கும் போது , நடுத்தர வயதுடையவர்கள் அதிகம் செலவு செய்து வாங்கும் சக்தியுடன் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள், அதனால் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன .
இருப்பினும் அவர்களே வயதாகும்போது, அவர்களின் கலோரி தேவைகள் குறையும் அதனை சரியாக உணர்ந்து, அந்த சமயம் குறைவான கலோரிகளை உட்கொள்ள துவங்க வேண்டும் மற்றும் வயது முன்னேறும்போது உடல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்,அப்படி செய்தால் உடல் பருமன் பிரச்சனை வராது என்று அவர் கூறினார்.
உடல் எடையும், உணவு பழக்கமும்:
இந்த உடல் பருமன் பிரச்சனையில் உள்ள வேறுபாடுகள், வயதை தாண்டி உணவு பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் நாம் உணவு பழக்கத்தில் பொதுவாக சொல்லும் சில விஷயங்களை NFHS வெளியிட்டுள்ள கணக்கீடு தகர்த்துள்ளது. காரணம் உடல் பருமன் அதிகமாக இருக்கும் பஞ்சாபில், 25 சதவீத பெண்களும், 28.8 சதவீத ஆண்களும் வாரத்திற்கு ஒரு முறையாவது பொரித்த உணவை சாப்பிடுவதாக தெரிவித்தனர். ஆனால், உடல் பருமன் குறைவாக உள்ள மிசோரமிலோ, வறுத்த… பொரித்த… உணவின் மீதான ஆர்வம் அதிகமாகவே இருக்கிறதாம் . கிட்டத்தட்ட 93 சதவீத பெண்கள் மற்றும் ஆண்கள் ஒவ்வொருவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது
பொரித்த உணவை உட்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அதிக கலோரி கொண்ட வறுத்த உணவை உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயத்தை இந்த தரவு பொய்யாக்குகிறது. இருப்பினும் இனி அனைவரும் துரித உணவுகளை தாராளமாக சாப்பிடலாம் என்பதற்கான கணக்கீடு இது கிடையாது. காரணம் நுகர்வுப் பழக்கத்திற்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு அவ்வளவு எளிதல்ல என்று கூறுகிறார் டாக்டர் ஹேமலதா ஆர், இதுகுறித்து அவர்
பேசுகையில் “உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல், தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொள்பவருக்கு உடல் பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அடிக்கடி ஜங்க் உணவுகளை உட்கொள்பவர்களில் சிலர் பருமனாக இல்லாவிட்டாலும், அவரது உடற்பகுதியைச் சுற்றி அதிக கொழுப்புடன் படிந்து , உடல் அமைப்பை மாற்றியிருக்கலாம் மற்றும் பார்க்க குறைவான தசை உடைய நபர்களாகவும் தோன்றலாம் .
இந்த நபர்கள் சாதாரணமாகவோ அல்லது எடை குறைவாகவோ தோன்றினாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாததால் டைப்-2 நீரிழிவு நோய், இருதய நோய்கள், கொழுப்பு கல்லீரல் மற்றும் மாரடைப்புக்கு
ஆளாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என அவர் கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா











