அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆதரவாளர்களிடம் வாழ்த்து பெற்றார்.   அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் என…

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆதரவாளர்களிடம் வாழ்த்து பெற்றார்.

 

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் 9.15 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். அதேபோல ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்தனர்.

 

அதிமுக தலைமை அலுவலக வாயில் கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பன்னீர்செல்வம் பிரத்யேக வாகனத்தில் தலைமை அலுவலகம் வந்தார். அந்த சமயம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது.

அப்போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலுக்கு நடுவே தலைமை அலுவலகம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

அவருடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மாடியில் நின்றவாறு தொண்டர்களை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் கையசைத்து வாழ்த்துகளை பெற்றார். மேலும் அதிமுக கொடியை, அதிமுக தலைமை என்ற பாணியில் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

 

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பு இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேனர்கள் கிழிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதையடுத்து, உடனே அதிகமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு மோதல்களை தடுத்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.