தஞ்சாவூர் மருத்துவமனையில் குந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட சம்பவத்தில் ரூ.75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிறந்து 14 நாளேயான குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட வழக்கில், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மே 25 ஆம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது. அந்த ஊசியைப் எடுக்க முயன்ற போது செவிலியரின் கவனக்குறைவால் குழந்தையின் இடதுகை கட்டைவிரல் வெட்டப்பட்டது. இதையடுத்து கட்டை விரலை சேர்ப்பதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால் அதற்கான பலன்கள் இல்லை. கட்டை விரலை சேர்ப்பதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவனக்குறைவால் செயல்பட்ட செவிலியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்கவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டை விரலை பொருத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 75 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் குழந்தையின் கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மேலும் வழக்கு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.







