விஸ்வரூபம் எடுக்கும் அணு உலை வழக்கு

அணுக்கழிவுகளை பாதுகாக்கும் கட்டமைப்பை உருவாக்கவும், அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அணுஉலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக 50 மாதங்கள், அதாவது ஜூலை 2026ம் ஆண்டு வரை…

அணுக்கழிவுகளை பாதுகாக்கும் கட்டமைப்பை உருவாக்கவும், அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அணுஉலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக 50 மாதங்கள், அதாவது ஜூலை 2026ம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்று இந்திய அனுசக்தி கழகம் சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு கால அவகாசம் வழங்க கூடாது என எதிர் மனுதாரரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது

அந்த மனுவில், அணுகழிவுகளை உரிய முறையில் பாதுகாக்கவில்லை என்றால் அதிலிருந்து ஏற்படும் கதிர் வீச்சு  மனித உயிர், விலங்கு, சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிக கட்டமைப்புகளானது, நிலநடுக்கம், இயற்கை பேரிடர், விபத்துக்களை தாங்கும் வல்லமை உள்ளதாக அமைக்கப்படுவதில்லை எனவே அதன் பாதுகாப்பு கேள்விக்குறியானதே என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கும் அணுக்கதிர்வீச்சை கக்கும் உலோகங்களை திறந்த வெளியில் தற்காலிகமான கட்டமைப்பில் பாதுகாப்பாக வைப்பது என்பது ஏற்புடையதல்ல.

அவ்வாறு அணு மின்நிலைய வளாகத்திலேயே பாதுகாப்பாக வைப்பது ஆபத்தை விளைவிக்கும், அதிலிருந்து கதிர்வீச்சு கசிந்தால் அது கடும் உடற்பாதிப்புகளை ஏற்படுத்தும், மேலும் அதனை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை செலவளிக்க வேண்டியது வரும்

அணுக்கழிவுகளை பாதுகாப்பது என்பது கடும் சவாலான விசயம் என்பது சர்வதேச அளவிலான அனுபவத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 3 மற்றும் 4க்கு அணுகழிவுகளை உலையிலிருந்து தொலைதூரத்தில் பாதுகாக்கும் தொழில்நுட்பம் கொண்ட கட்டமைப்பு (AFR- Away from Reactor) ஏற்படுத்த இதுவரை சுற்றுசூழல் அனுமதி பெறவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அணு உலை தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதில்லை என பூவுலகு நண்பர் சார்பில் வாதிடப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், மக்களின் நலன் கருதி  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகளை உடனடியாக ரஷ்யாவுக்கு எடுத்து செல்ல வேண்டும் என தமிழக முதலமைச்சரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதை நீதிமன்றத்தில் பூவுலகு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

இவ்வழக்கில் பூவுலகின் நண்பர்கள் தரப்பு தாக்கல் செய்துள்ள விளக்க மனுவுக்கு விரிவான பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரி இந்திய அணுசக்தி கழகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.