நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மா ஒட்டு மொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களின் இறைதூதராக கருதும் முகமது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து இவர் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர் மீது நீதிமன்றங்களில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நுபுர் சர்மா, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து புகார்களையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்த வழக்கை மாற்ற வேண்டுமெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாமே? ஒரு கருத்து கூறியதால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. நுபுர் ஷர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்படுத்திவிட்டது.
உதம்பூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம். நுபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். நுபுர் சர்மா நடந்து கொண்ட விதம் அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது என்று தெரிவித்தனர்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த நுபுர் சர்மா தரப்பு, ஒரு கருத்துக்கு பல்வேறு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது இது ஏற்புடையது அல்ல. இந்த நீதிமன்றம் அனைவருக்குமான நீதிமன்றம். எனவே இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர் யார் என்பதை விட அவரது பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எங்கள் தரப்பு தவறு செய்திருந்தால் எங்களை கைது செய்யட்டும் என்று கூறினர்.
அதற்கு நீதிபதிகள் கூறுகையில், ஆம். இது அனைவருக்குமான நீதிமன்றம் தான். ஆனால் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்க முடியாது.
நுபுர் சர்மா தரப்பு, டெல்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே ஆஜராகி உள்ளோம்.
நீதிபதிகள், இதுவரை விசாரணையில் என்ன நடந்தது? உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். அது தள்ளுபடி செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக நுபுர் சர்மா தரப்பு தெரிவித்தது.
மேலும், நுபுர் சர்மா தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.








