சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல்…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை எனும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்துள்ள அவர், தற்போது உங்களுக்குப் பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களே கிண்டல் செய்யும் அளவுக்கு அமலாக்கத்துறை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு எதிராக இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேபோல், வருமான வரித்துறை தனக்கும் ஒரு ‘காதல் கடிதம்’ அனுப்பியுள்ளது என கிண்டல் செய்துள்ள சரத் பவார், தேர்தலின்போது  தான் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ராவில் சரத் பவாரின் முயற்சி காரணமாக அம்மாநிலத்தில் சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. சிவ சேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கூட்டணி அரசு முடிவுக்கு வந்து புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்புக்கு மறுநாளே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது மகாராஷ்ட்ர அரசியலில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.