நடிகர் மாதவன் முதல்முறையாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு.
“ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்றால் தேச துரோகி என்ற பட்டம் கொடுத்தால் மட்டும் போதும்”. இது ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணன் கதையை கேட்ட பிறகு சூர்யா பேசிய வசனம்.
இந்தியா ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேறி செல்ல உறுதுணையாக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் தேச துரோகி என்ற பொய்க் குற்றச்சாட்டில் இருந்து எப்படி மீண்டு வந்தார். அவரின் தியாகங்கள், போராட்டங்கள் குறித்து விளக்கும் திரைப்படம் தான் ராக்கெட்ரி – நம்பி விளைவு.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இயக்கி நடித்துள்ளார் மாதவன். இல்லை, இல்லை நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார். தன்னுடைய உடல் எடையை அதிகரித்து மீண்டும் உடல் எடையைக் குறைத்து, பல்லின் வடிவமைப்பை மாற்றி நம்பி நாராயணன் போன்று தெரிய வேண்டும் என அவ்வளவு மெனக்கெட்டுள்ளார் மாதவன்.
படத்தின் முதல் பாதி நம்பி நாராயணன் இளமை காலம், ராக்கெட் விஞ்ஞானியாக இஸ்ரோவில் பணியாற்றுவது, நாசாவில் கிடைத்த வேலையை நாட்டிற்காக உதறித் தள்ளுவது, லிக்விட் என்ஜின், சாலிட் என்ஜின் உள்ளிட்ட டெக்னிக்கலான வார்த்தைகளாலும், ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் எனவும் காட்சிகள் சற்று மெதுவாக நகர்கிறது.
இரண்டாம் பாதி விகாஸ் என்ஜினை கண்டுபிடிப்பது, ராக்கெட் சயின்ஸ் போட்டியில் இந்தியாவை உலக நாடுகளில் மத்தியில் கொண்டு செல்வது, தேச துரோகி பட்டம், அதன் விளைவு, குடும்ப பிரச்னை, நிரபராதி என நிரூபித்து தன்னை மீண்டும் ஒரு விஞ்ஞானியாக நிலை நிறுத்துவது என சென்டிமென்டாக மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன், உன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம் மோகன், ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெகன் என அனைவரும் தங்களின் நடிப்பு திறனை வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு நாயை கல்லால் அடிக்க வேண்டும் என்றால் வெறிநாய் என்ற பட்டம் கொடுத்தால் போதும். அதேபோல ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்றால் தேச துரோகி என்ற பட்டம் கொடுத்தால் போதும் என சூர்யா பேசும் வசனங்கள் ஒரு வரியில் படத்தை விளக்கி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே வின் காட்சிகள் ஒவ்வொன்றும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம்பி நாராயணன் மற்ற விஞ்ஞானிகளை போல ஏன் கொண்டாடப்படவில்லை என்பதை புரிய வைத்துள்ளது இந்த படம்.
– தினேஷ் உதய்







