நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்திய உரை:
அன்புமிக்க எனது தமிழக சகோதர சகோதரிகளே, வணக்கம். நம்முடைய நாட்டின் 75ஆவது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடும் இந்த மங்களத் தருணத்தில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியத் தாய், சுதந்திரத் திருநாளின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடுகிறாள். நம்முடைய நாட்டின் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரம் இது; வெளி உலகிற்கு அறியப்படாதவர்கள் இவர்களில் பலர் உண்டு. நம்முடைய நாட்டின் மேன்மைமிக்க வரலாற்றை, செறிவுமிக்க பண்பாட்டை, பெருமைமிக்க சாதனைகளையும் கொண்டாடுகிற நேரமிது.
வீடு தோறும் மூவர்ணக் கொடி என்னும் வகையில், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, வரலாறு காணாத உற்சாகத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீரத்திலும், ரத்தத்திலும் உருவானது நம்முடைய தேசியக் கொடி. இந்த நன்னாளில், அவர்கள் அனைவருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டின் நில, நீர் மற்றும் வான் எல்லைகளில் துடிப்பான பாதுகாப்பை நல்குவதற்கும், சைபர் வெளிகளைக் காப்பதற்கும், நம்முடைய முப்படைகள், துணை ராணுவப் படைகள், காவல் துறை, நுண்ணறிவு அமைப்புகள் ஆகியவையும் பாதுகாப்பு அறிவியலாரும் முனைப்புடன் செயல்பட்டுள்ளனர்.
இதனால், உள்நாட்டு அமைதியையும் காத்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, நேர்மை, அரசமைப்பு விழுமியங்கள், உள்நாட்டு அமைதி ஆகியவற்றைக் காப்பதில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாபெரும் வீரர்களுக்கும், நம்முடைய மனமார்ந்த நன்றியறிதலை இத்தருணத்தில் உரித்தாக்குகிறோம்.
உலகையே ஆட்டிப்படைத்த பெருந்தொற்றுக் காலத்தில், நம்முடைய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில், நம்முடைய மருத்துவர்களும் செவிலியரும் பிற நலவாழ்வுப் பணியாளர்களும் அசாதாரணமான துணிவையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினர். இந்தப் பணியில் தங்களின் இன்னுயிர் ஈந்த மருத்துவர்க்கும் நலவாழ்வுப் பணியாளர்க்கும் நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
சூழலுக்கேற்ப மேம்பட்டு நின்ற நம்முடைய மருந்தாக்கியல் துறை, தக்க மருந்துகளை உலகிற்குத் தந்தது; உலகெங்கும் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில், தக்க தடுப்புமருந்துகளையும் அளித்தது. நம்முடைய நன்றியை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வோம்.
வளர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மக்கட்தொகைக்குப் போதுமான அளவில் மட்டுமில்லாமல், பிற நாட்டினருக்கும் உதவும் அளவில் நம்முடைய விவசாயிகள் உணவை உற்பத்தி செய்துள்ளனர். இத்தகைய சாதனை அளவு உணவு உற்பத்தியைத் தந்துள்ள நம்முடைய வேளாண் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள், சதுரங்க ஒலிம்பியாட் போன்ற பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளில் மிகச் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள பவானி தேவி, மாரியப்பன் தங்கவேலு, சரத் கமல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல், சதீஷ் சிவலிங்கம், கே. சசிகிரண், டி. குகேஷ், பி. அதிபன், ஆர். பிரக்ஞானந்தா, எஸ்.பி. சேதுராமன், கார்த்திகேயன் முரளி, ஆர். வைஷாலி ஆகிய வீரர்களையும் வீராங்கனைகளையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறோம்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளில், கைப்பந்து (வாலி பால்) போட்டிகளிலும், 4 முறை 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள டி. மாதவன், செல்வ பிரபு, எல். தனுஷ், லட்சுமி பிரபா, ஜனனி ரமேஷ் ஆகியோரைக் குறித்தும் பெருமை கொள்கிறோம். இவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் வெற்றியானது, இளைஞர்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்றும், நம்முடைய மாநிலத்தில் ஆரோக்கியமிக்க விளையாட்டுக் கலாசாரத்தை வலுப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.
மாற்றுத் திறனாளிகளின் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். மாற்றுத்திறனாளிகள், நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள், மகன்கள் மற்றும் மகள்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாட்டின் முழுமையான குடிமக்கள். கௌரவத்தோடு அவர்கள் வாழ்வதற்கும், நாட்டின் பெருமையுடைய குடிமக்களாக உணர்வதற்கும் தக்க நிலையை நாம் அனைவரும் உருவாக்கவேண்டும்.
ஆட்டிஸ குறைப்பாடு கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அச்சுறுத்தும் அளவில் உலகெங்கும் உயர்ந்து கொண்டுள்ளது. நம்முடைய நாட்டிலும், பல லட்சம் ஆட்டிஸக் குழந்தைகள் உள்ளனர். தக்க இடையீடுகள் வழியாக இவர்களுக்கு உதவிகள் தரப்படவேண்டும். மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும்.
ஆட்டிஸம் குறித்த கூடுதல் விழிப்புணர்வு, சமுதாயத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். பெண் குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், பெற்றோர்கள் பெரும்பாலும் இதனை இல்லையென்று மறுத்துவிடுகிறார்கள். இதனால், அந்தக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை மறுக்கப்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் குறித்து உணர்வுடனும் ஆதரவுடனும் செயல்படுமாறு மக்களை வேண்டுகிறேன். இக்குழந்தைகளுக்கு விரைவான சிகிச்சைகள் தரப்படவேண்டும். சிகிச்சை தாமதமானால், குழந்தைக்கு நன்மை கிடைக்காது.
அன்பு நண்பர்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க பாரதம், வளர்க தமிழ் நாடு, நன்றி.
இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.








