காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு – பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் ஒழிப்பில் சீரிய பணியாற்றிய…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் ஒழிப்பில் சீரிய பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2013-ம்ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் இருப்பு பாதை துணை கண்காணிப்பாளர் குணசேகரன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளர் முருகன், முதல்நிலை காவலர் குமார் உள்ளிட்ட 5 பேருக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருளை ஒழிப்பதில் தென் மண்டல காவல் தலைவர் அஸ்ரா கர்க் ஆற்றிய சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், சிறப்பு பதக்கம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது

விருது அறிவிக்கப்பட்டவர்கள் செய்த சாதனை:

1. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளினால், போதை பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக 128 கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு மட்டும், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பலபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக, கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2790 கிலோ எடையுள்ள 3584 கஞ்சா செடிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 10 வணிக வழக்குகளும் அடங்கும். 540 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அதில் 69 குற்றவாளிகள் “போதைப பொருள் குற்றவாளிகள்” என்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,266.9- கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 98 பாட்டில்கள் MEPHENTERMINE SULPHATE INJECTION IP கைப்பற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 345 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

3. சேலம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து இரயில் வண்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ”கஞ்சா வேட்டை2.0” மற்றும் ”கஞ்சா வேட்டை3.0”-யின்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

4. நாமக்கல் மாவட்டம் காவல் சார்பு ஆய்வாளர் முருகன் மற்றும் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆகிய இருவரும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண அதிக முயற்சி எடுத்து தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவட்டங்களுக்கு பயணம் செய்தும் ஆதாரங்களை திரட்டி அவர்களிடமிருந்து குட்கா பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளார்கள். அதற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரதின விழா நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.