வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 4 ஆம் தேதி வரை படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும்.
அக்டோபரில் பெய்த மழை அளவானது 15 சென்டிமீட்டர் என்று பதிவாகி உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை 45% இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை என்பது தமிழகத்துக்கு மட்டும் என்பது கிடையாது கேரளா, கர்நாடகா என்று அனைத்தும் சேர்ந்து தான். தமிழக பகுதியை பொறுத்த வரை இயல்பை எதிர்பார்க்கலாம் என்றார்.
படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய பாலச்சந்திரன், இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.







