ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறியதாவது:
மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சிறந்த திட்டம். ஆனால், அதனை இந்த அரசு பொருட்படுத்தவில்லை. அதிமுக அரசின் பல்வேறு நல்ல திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் மாணவர்களிடம் உள்ளன.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் விவகாரம் குறித்த கேள்விக்கு நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன், தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள். இப்போது என்னை மிஞ்சி இப்போது அணிலை கண்டுபிடித்துள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
.எங்கள் ஆட்சியில் அணில் எல்லா வெளிநாடுகளுக்கு சென்று விட்டது போல, இந்த ஆட்சியில் தான், அணில் மின் கம்பியில் போகிறது, இந்தக் கண்டுபிடிப்பை செய்த செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.







