‘7 மண்டலங்களில் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் கழிப்பறை இல்லை’

இந்தியா முழுவதும் ஓடும் ரயில் எஞ்ஜின்களில் 120 சரக்கு ரயில் எஞ்ஜின்களுக்கு மட்டும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. சமீப காலங்களாக ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் பெண் ரயில்…

இந்தியா முழுவதும் ஓடும் ரயில் எஞ்ஜின்களில் 120 சரக்கு ரயில் எஞ்ஜின்களுக்கு மட்டும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

சமீப காலங்களாக ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் பெண் ரயில் ஓட்டுநர்கள் ரயில் எஞ்ஜின்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கும் போது ரயில் எஞ்ஜினில் கழிவறை வசதிகள் செய்யப்படாததால் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதால் கழிப்பறை வசதி செய்துதர ஓட்டுநர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் எஞ்ஜினில் உள்ள கழிப்பறை வசதிகள் சம்பந்தமாக சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா ஆர்டிஐ மூலமாக ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குநர் அனுராக் அகர்வால் அளித்துள்ள பதிலில், இந்தியா முழுவதும் 120 டபுள்யு.ஏ.ஜி 9 மின்சார என்ஜின்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 9 மின்சார ரயில் எஞ்ஜின்களில் கழிப்பறை வசதி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது 120 ரயில் எஞ்ஜின்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் ஆண் மற்றும் பெண் ரயில் ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கழிப்பறை வசதிகள் கொண்டுள்ள ரயில் எஞ்சின் எண்களின் எண்ணிக்கை மண்டலம் வாரியாக

  • மத்திய ரயில்வே 15
  • மேற்கு மத்திய ரயில்வே 16
  • கிழக்கு ரயில்வே 01
  • தென் கிழக்கு ரயில்வே 05
  • வடகிழக்கு எல்லை ரயில்வே 01
  • தென் கிழக்கு மத்திய ரயில்வே 26
  • தென் மத்திய ரயில்வே 27
  • கிழக்குக் கடற்கரை ரயில்வே 28
  • தென்மேற்கு ரயில்வே 01

அண்மைச் செய்தி: ‘நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு; பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய பாஜக தலைவர் டாக்டர் சரவணன்’

இந்தியாவில் மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 9 மண்டலங்களில் மட்டும் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் மட்டும் கழிப்பறை வசதி இருப்பது தெரியவந்துள்ளது. தென்னக ரயில்வே மண்டலம் உள்ளிட்ட 7 மண்டலங்களில் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் 60 ஆயிரம் ரயில் ஓட்டுநர்கள் உள்ள நிலையில் சுமார் 1500 பெண் ரயில் ஓட்டுநர்கள் உள்ளனர். இந்நிலையில், பெண் ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் இயற்கை உபாதைக்காக பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளதாக ரயில்வே ஊழியர்கள் சார்பாகக் கடந்த 4-ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.