கோடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து
வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கோடநாடு விவகாரம் தொடர்பாக, அரசு
பொய் வழக்குப் போடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டனர். பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல் என்றும் அதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவர்கள் சபை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடநாடு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, ’இந்த வழக்கின் விசாரணை, முறைப்படி நீதிமன்ற ஒப்புதலின் அனுமதியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் நடவடிக்கை உள்ளது. கோடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசியல் நோக்கத்தோடு செய்யப் படுவதில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணமும் இல்லை என்றார்.







