திமுக அரசு திட்டமிட்டு பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது நடக்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கோடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். பதாகைகளை கொண்டு வந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல் என்றும் அதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படியும் சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக, பாமக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சிந்திக்காமல், அதிகார பலத்தால் பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்குகிறது என குற்றம் சாட்டினார். மேலும், பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம், அதனை எதிர்த்து வெற்றியும் பெறுவோம். இன்றும், நாளையும் அதிமுக உறுப்பினர்கள் பேரவை நிகழ்வுகளை புறக்கணிக்கிறோம் என தெரிவித்தார்.
அவரைத்தொடந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கோடநாட்டில் உள்ள இல்லத்திற்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கோடநாடு இல்லத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளை கும்பலின் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை தடுக்க முயன்ற காவலாளி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வழக்கு முடியும் தருவாயில் உள்ளபோது இந்த கொலை, கொள்ளை வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு இதுபோன்று திட்டமிட்டு பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது நடக்காது என தெரிவித்தார். மேலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியிலே தொய்வின்றி பணியாற்றும் கட்சி அதிமுக என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என தெரிவித்தார்.










