மும்பையில் உள்ள ஐஐடி வளாகத்தில் விடுதி கேண்டீனில் ”இங்கு சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே உட்காரலாம்” என சில மாணவர்கள் ஒட்டிய போஸ்டரினால் அங்கு பரபரப்பு நிலவியது.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவி ஒருவரை மற்றொரு மாணவி அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதனைதொடர்ந்து விடுதி கேன்டீனில் அசைவம் உட்கொள்ளும் மாணவர்களை உட்கார விடாமல் தடுக்கும் முயற்சி நடந்ததாக கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர். முன்னதாக 2018-ம் ஆண்டு விடுதி கேன்டீனில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி வளாகத்தில் பல வருடங்களாகவே இதுபோன்ற பிரச்னைகள் அவ்வப்போது நடைபெறுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். கல்லூரி விடுதி கேண்டீன் சுவர்களில் ஒரு சில மாணவர்கள் “சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர் கூட்டமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டத்தின் (APPSC) உறுப்பினர் ஒருவர் இந்த சம்பவம் பற்றி விளக்கினார். கேண்டீன் சுவர்களில் “இங்கு சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே உட்காரலாம்” என சில மாணவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், அசைவ உணவு உட்கொள்ளும் மாணவர்களை கட்டாயப்படுத்தி இருக்கைகளை காலி செய்ய வைப்பதாகவும் அவர் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் மனுவின் மூலம் ஐஐடி நிர்வாகம் இதுபோன்ற கொள்கையை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் கல்லூரி வளாகத்தில் உணவின் அடிப்படையில் மாணவர்களுக்கான தனி இருக்கை ஏற்பாடு இன்னும் நடைமுறையில் இருந்துவருவது வருத்தம் அளிப்பதாக மாணவர்கள் அமைப்பு தெரிவித்தது.
சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை மாணவர் அமைப்பினர் கிழித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமூக ஊடகங்களில் இந்த பிரச்னை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சினையில் மேலும் தகவலுக்கு ஐஐடி போவாய் இயக்குனர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்களை அணுக முடியவில்லை.







