திருப்பூர் சம்பவம் குறித்து யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் என மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன்
நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் கைகலப்பு நடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழகத்தி உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளும் இது குறித்து அறிக்கைகளை வெளியிட்டன.
இந்த நிலையில் திருப்பூர் சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது..
”திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம்.
ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு தனிப்படை சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். எனவே யாரும் இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் எனவும் கேட்டுக் கொண்டார்.
– யாழன்







