அமெரிக்காவில் கறுப்பின இளைஞரை அடித்துக் கொன்ற போலீஸார்; ஜார்ஜ் பிளாய்ட் கொலை போல் மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை போல் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞரை போலீஸார் அடித்துக் கொன்றுள்ளனர். டென்னெஸ்ஸி மாகாணம் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தைச் சேர்ந்தவரான டயர் நிக்கோலஸ் (29) கடந்த 7ஆம் தேதி…

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை போல் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞரை போலீஸார் அடித்துக் கொன்றுள்ளனர்.

டென்னெஸ்ஸி மாகாணம் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தைச் சேர்ந்தவரான டயர் நிக்கோலஸ் (29) கடந்த 7ஆம் தேதி இரவு தனது தாயாருக்கு மருந்துகள் வாங்க காரில்  சென்று கொண்டிருந்தார். அப்போது, ரெட் சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்த போலீஸார், தங்கள் வாகனத்தில் அவரை பின் தொடர்ந்தனர்.  போலீஸார் வருவதை பார்த்து பயந்து போன டயர் நிக்கோலஸ், காரை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கினார். இதையடுத்து, போலீஸார் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சினர்.

மின்சாரம் பாய்ந்ததால் மயங்கி விழுந்த நிக்கோலஸை சாலையோர சுவரில் சாய்ந்தப்படி அமர வைத்து, போலீசார் 6 பேரும் ஒருவர் மாற்றி ஒருவராக அவரை கடுமையாக அடித்துள்ளனர்.  ஏற்கனவே மின்சாரம் பாய்ச்சிய அதிர்ச்சியில் இருந்த நிக்கோலஸ், போலீஸாரின் அடி தாங்க முடியாமல் அம்மா என கத்தினார்.

போலீசார்  அவரை படுக்க வைத்து அவர் மேல் ஏறி முகத்தில் பலமாக குத்தினர். இதில் அவரது மூக்கிலும், வாயிலும் இருந்து ரத்தம் ஊற்றியது. பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த நிக்கோலஸை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் கடந்த 10-ம் தேதி இறந்தார்.

இதற்கிடையில், நிக்கோலஸை போலீசார்  தாக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2020-ம் ஆண்டு  மினியோபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதுடைய கறுப்பினத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் அங்கேயே இறந்தார்.

அவர், துடிதுடித்து உயிரிழந்த பரிதாப காட்சி, சமூக வலைதளங்களிலும் ஊடங்களிலும் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கும் உள்ளானார். இந்நிலையில் அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.