ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை – எடப்பாடி பழனிசாமி

தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நிகழ்த்திய உரையில் புதிய திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாள் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

ஆளுநர் உரையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த திட்டமும் அதில் இடம்பெறவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இருந்த அதே செய்திதான் ஆளுநர் உரையிலும் இடம்பெற்றது.

போதைப்பொருள் ஒழிக்கப்படும், பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றெல்லாம் முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 38 நாள்களில் 150 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான 126 பாலியல் குற்றங்கள் 130 கொலை வழக்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. அது தவறு, என்னுடைய மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். கட்சியின் எந்த பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.