இந்திய – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் முக்கியமான சில கேட்சுகளை தவறவிட்டது பெரும் விவாத பொருளாகியுள்ளது.

ஒரு அணிக்கு பேட்ஸ்மேன், பவுலர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக மிக முக்கியம் வீக்கெட் கீப்பரின் பணி.கேட்ச், ஸ்டெம்பிங், பேட்டிங், ரன் அவுட்டில் மிக துரிதமாக செயல்படுவது, பீல்டிங், பீல்டர்களை செட் செய்வது, எல்பிடபிள்யூக்களை அப்பீல் செய்வது என்று அணியின் பலமே விக்கெட் கீப்பர்தான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Substitute இல்லாமல் 50ஓவர்களும் களத்தில் கட்டாயம் நிற்க வேண்டும் மிகவும் சவாலான பணி.உதிரியாக செல்லும் 20 முதல் 30ரன்களை தடுத்தாலே அணியின் பாதி வெற்றி உறுதியாகிவிடும்.
இந்திய அணியில் 1976 -86 கிர்மானி தான் அதிக நாட்கள் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் அதற்கு பிறகு இந்திய அணிக்கு 8ஆண்டுகள் நிலையான கீப்பர்கள் கிடைக்காமல் அணி மிகவும் தத்தளித்தது.1994 முதல் 2001 வரை செயல்பட்ட நயன் மூங்கியாவை அடுத்த சிறந்த விக்கெட் கீப்பராக சொல்லலாம். பேட்டிங்கில் அவர் சற்று சொதப்பலான ஆட்டத்தையே மேற்கொள்வார்.
அதன்பின் MSK பிரசாத், சபாகரீம், விஜய் தாகியா, தீப்தாஸ் குப்தா, ராத்ரா, பார்தீவ், தினேஷ்கார்த்தி என்று பலர் வந்தனர் ஆனால் யாருமே அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.சில நேரங்களில் ராகுல் டிராவிட்டை கூட விக்கெட் கீப்பராக இந்திய அணி பயன்படுத்தியது.
90s கிட்ஸ்களுக்கு தெரிந்த சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் கில்கிறிஸ்ட்டை சொல்வார்கள் பின் ஆன்டி பிளவர், பவுச்சர் என்று சிலர் கூறுவார்கள்.ஆனால் தற்சமயம் ஒட்டு மொத்த கிட்ஸ்களும், பெருசுகளும் உச்சரிக்கும் சொல் தோனி.2005 ஆண்டு களமிறங்கிய தோனிக்கு தற்சமயம் பல அவதாரம் உண்டு. ஆனால் அவரை மிக சிறந்த கீப்பராகவே பார்க்கலாம் .கீப்பர் என்றால் சிறந்த மேய்ப்பர் என்றே பொருள்.
கீப்பர் என்ற வார்த்தையிலே ஒட்டு மொத்தமும் உள்ளடங்கிவிடும். அந்த வகையில் தோனிக்கு பிறகு ஒரு அந்த இடத்தை இந்திய அணியில் நிரப்ப சிறிது நாள் ஆகும்தான்.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான போட்டியில், பேட்டிங்கில் சஹாவை விட ரிசப் பண்ட் நன்றாக செயல்படுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. 23வயதான இளம்வீரர் என்றே சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ரஞ்சியில் போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய பண்ட், அடுத்த ஆண்டே மகாராஷ்ட்ரா அணிக்கு எதிராக 308 ரன்கள், ஜார்கண்ட் அணிக்கு எதிராக 46பந்துகளில் சதம், 2016ஆம் ஆண்டு 19வயதிற்கு உட்பட்ட இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப்போட்டியில் சதம், 2017ஆம் ஆண்டு கவுதம் காம்பீருக்கு மாற்றாக டெல்லி அணி கேப்டன், A டீம்மை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் அடித்த சதம் என பண்ட் மைல்கல்லை எட்டிய வயது வெறும் 21 வயதே.
பேட்டிங்கை பொறுத்தவரை பண்ட் பங்கு மிகமுக்கியமானது இந்திய அணிக்கு மிக அவசியமானதும்கூட. நேற்றைய ஆட்டத்தில் அறிமுக வீரர் புகோவஸ்கி 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.ஆனால் அவர் கொடுத்த இரண்டு கேட்சுகளை பண்ட் தவறவிட்டதால் அரைசதம அடிக்க வழிவகுத்தது. இதனை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிக கேட்சுகளை தவறவிட்டவர் என்ற புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுசரிதான் எளிதாக ட்ரோல் செய்யலாம் ஆனால் தற்போது இந்திய அணிக்கு பேட்டிங் வரிசையில் X Factors வீரர் மிக முக்கியம் அவர் கண்டிப்பாக பேட்டிங்கில் ஜொலிப்பார். ஏனென்றால் ஒரு பேட்ஸ்மேனை கீப்பர் பணியில் எளிதாக மேம்படுத்திவிடலாம். அவர் பேட்டிங்கிலும் சொதப்பும் பட்சத்தில் மாற்று வீரரை பற்றி யோசிக்கலாம்.
இந்த உலகத்தில் எதனோடும் எதனையும் ஒப்பிடுவது என்பதே தவறான பார்வை மேலும் அவரை தோனியுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது மிகத்தவறு, அவர் அவர்கள் கடந்து வந்த பாதை வேறு; தோனி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தான். ஆனால் மாற்று என்று ஒருவர் வந்துதான் ஆக வேண்டும். இன்னும் பயிற்சியளிக்கலாம் ஆனால் அவரை ஓரங்கட்ட செய்வது போன்று மூத்த வீரர்களின் விமர்சனம் அவசியமற்றதே.
- மா.நிருபன் சக்கரவர்த்தி