தரைக்குறைவாக பேசிய விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வாராஜூக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சந்தி சிரிப்பதாக சாடினார்.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தன்னை முன்னிலைப்படுத்துவதில் முதலமைச்சருக்கு பேரார்வம், தன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்வது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது தான் திமுகவின் செயல்பாடு என்றும், மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.
பொய்வழக்கு போடுவதால் அதிமுகவுக்கு தொய்வு ஏற்படுத்தலாம் என திமுக எண்ணுவதாக தெரிவித்தார். ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக, வழக்குகள் மூலம் அழித்துவிடலாம் என நினைத்தால் அது நடக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக என்பது தண்ணியில் அமுக்க முடியாத பந்து என்பதால், எவ்வளவு அமுக்கினாலும் மேலே வரத்தான் செய்யும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம் என தெரிவித்த அவர், லஞ்ச ஒழிப்புத்துறை முதலமைச்சரின் கீழ் உள்ளது என்பதாலும், பொதுக்குழு நடைபெறும் நிலையில் மக்களை திசை திருப்பும் செயல்தான் இது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பற்றியும், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பற்றியும் பேசியது விவாதமாக மாறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், கோவை செல்வராஜுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என காட்டமாக தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








