டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவனுக்கு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பின்னர் மாணவருக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயல் நாடு முழுதும் உள்ள மாணவர்களை மிரட்டும் வகையிலான செயல் என்றும், இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு, நோட்டீஸ் திரும்ப பெற்ற பிறகு இதில் நடவடிக்கை எடுக்க என்ன வேண்டி இருக்கிறது என வினவியது.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்பிவிட்டு பின்பு அதை திரும்ப பெறுவதால் அந்த தவறை சரி செய்வதாக எடுத்துக் கொள்ள முடியாது அது நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும் எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை என்பது எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்
இதைகேட்ட நீதிபதிகள், போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தங்களது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில்
மாணவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆட்சியருக்கு எப்படித் துணிச்சல் வந்தது? எந்தவொரு மாணவர் மீதும் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியிருந்தும், அந்த உத்தரவை எப்படி மீற முடியும் ? என வினவியதோடு. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்போம் என்று தெரிவித்தது.
நொய்டாவில் உள்ள கவுதமபுத்தா பல்கலைக்கழக மாணவர் டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டார் என்ற காவல்துறையின் அறிக்கையை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக அந்த மாணவருக்கு எதிராக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் 130வது பிரிவின் கீழ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளர்.
மேலும், மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் அமைதியை காப்பதை உறுதி அளிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் தனிநபர் பிணை பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.




