இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளிக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால், அதில் இருந்து மீள அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்கரமசிங்கே, நாட்டின் நிதி நிலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்திடம் 6 பில்லியன் டாலர் கடன் உதவி கோரி இருப்பதாகவும், இது தொடர்பாக நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஜார்கிவியாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் மீண்டும் உதவி கேட்கலாமே என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியா அறிவித்த 3.5 பில்லியன் டாலர் கடன், பொருட்களாக இலங்கைக்கு வந்துவிட்டதாகவும், இனியும் இந்தியாவிடம் கடன் கோருவது எளிதல்ல என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏன் அதிக கடன் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவில் சிலர் கேட்பதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கே, எனினும், இலங்கைக்கான கடன் உதவியை மேலும் அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.








