இலங்கைக்கு உதவி – இந்தியாவை புகழ்ந்த சீனா

இலங்கைக்கு இந்தியா செய்து வரும் பொருளாதார உதவி பாராட்டுக்குரியது என சீனா தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லீஜியன், பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்…

இலங்கைக்கு இந்தியா செய்து வரும் பொருளாதார உதவி பாராட்டுக்குரியது என சீனா தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லீஜியன், பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் பாராட்டுக்குரியவை என்றும் அந்த உதவியை சீனா அங்கீகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள், நெருக்கடியில் இருந்து மீள தேவையான உதவிகளை அளிக்க சீனா விருப்பமாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக அறிவித்த இந்தியா, அந்த கடனை பொருட்களாக வழங்குவதாகக் கூறி இருந்தது. அதன்படி, எரிபொருள், யூரியா, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு வழங்கி வருகிறது.

2.5 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரி இருந்தது. இதற்கு சீனா உரிய பதில் அளிக்காததை அடுத்து, கடந்த திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சீனாவின் பார்வை தற்போது இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் மீது இல்லை என்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பின்ஸ், வியட்நாம், கம்போடியா நாடுகள் மீதுதான் இரு்கிறது என்றும் கூறி இருந்தார். பாகிஸ்தான் விஷயத்தில்கூட சீனாவின் ஆர்வம் குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லீஜியன், எப்போதும்போல் தெற்காசிய நாடுகள் மீதும் சீனாவின் கவனம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தெற்காசிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு கோவிட் 19, உக்ரைன் – ரஷ்ய போர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவையே காரணம் என்றும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லீஜியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.